search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பேஸ்புக் காதலன்"

    ஆசைவார்த்தை கூறி நர்சிங் மாணவியிடம் உல்லாசமாக இருந்து விட்டு திருமணத்துக்கு மறுத்த பேஸ்புக் காதலனை போலீசார் தேடி வருகின்றனர்.
    திருப்பத்தூர்:

    காட்பாடி தாராபடவேடு ஈஸ்வரன் கோவில் தெருவை சேர்ந்தவர் சதீஷ் (வயது 23). இவர் கண் மருத்துவம் தொடர்பான துணை மருத்துவபடிப்பை முடித்து விட்டு வெளிநாட்டில் வேலைபார்த்து வருகிறார்.

    இவருடன் வேலூர் மாவட்டத்தை சேர்ந்த நர்சிங் கல்லூரி விடுதி ஒன்றில் தங்கிப்படிக்கும் 21 வயது மாணவி பேஸ்புக் மூலம் அறிமுகமானார். அதனை தொடர்ந்து பேஸ்புக்கில் காதல் வார்த்தைகளை பரிமாறி இருவரும் காதலித்து வந்தனர்.

    இந்த நிலையில் சொந்த ஊர் வந்த சதீஷ் பேஸ்புக்கில் அறிமுகமான நர்சிங் மாணவியை சந்தித்து திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி அவருடன் பழகினார். பின்னர் அவரை ஏலகிரி மலையில் உள்ள தனியார் விடுதிக்கு அழைத்துச்சென்று உல்லாசம் அனுபவித்துள்ளார். மறுநாள் அந்த மாணவியை அவரது வீட்டிற்கு அழைத்துச்சென்று விட்டபின் அவருடன் பழகுவதை நிறுத்திக்கொண்டார்.

    ஏமாற்றம் அடைந்த அந்த மாணவி தனது பெற்றோருடன் சதீஷ் மற்றும் அவரது தந்தை ஜோசப்மூர்த்தி ஆகியோரை சந்தித்து சம்பவம் குறித்து கூறினார். ஆனால் அவர்கள் தவறை ஒப்புக் கொள்ளாமல் மாணவியை மிரட்டியதாக தெரிகிறது. இது குறித்து மாணவி திருப்பத்தூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார்.

    அங்கு விசாரணைக்கு வந்த சதீஷ், ‘‘பதிவு திருமணம் செய்து கொள்கிறேன், இல்லையென்றால் சட்டரீதியான நடவடிக்கைக்கு கட்டுப்படுகிறேன்’’ என எழுதி கொடுத்து சென்றார்.

    இந்த நிலையில் மாணவி தங்கி படிக்கும் கல்லூரி விடுதிக்கு சென்ற சதீஷ், ‘‘போலீஸ் நிலையத்தில் அளித்த புகாரை வாபஸ் வாங்கினால் எனது வீட்டிற்கு நீ வரலாம். அது இனிமேல் உன்னுடைய வீடுதான்’’ எனக்கூறி திருப்பத்தூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்தார். அங்கு சதீஷ் மீது கொடுத்த புகாரை மாணவி திரும்ப பெற்றார்.

    பின்னர் அங்கிருந்து காரில் வீட்டிற்கு செல்லும் வழியில் மாணவிக்கு டீ வாங்கி கொடுத்துள்ளார். அந்த டீயில் மயக்க மருந்து கலந்து இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் டீ குடித்த மாணவி சிறிது நேரத்தில் மயங்கி விழுந்தார். அவரை சதீஷ் வேலூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்து விட்டு நண்பர் ஒருவருடன் ஓடிவிட்டார்.

    சிகிச்சைக்கு பிறகு குணமான அந்த மாணவி, சதீஷின் வீட்டிற்கு சென்றார். அங்கு சதீஷ் மற்றும் அவரது பெற்றோர் அந்த மாணவியிடம் ‘‘உன்னை யாரென்றே தெரியாது. உனக்கும், எங்களுக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை என கூறி அடித்ததாகவும், மேலும் வீட்டின் பக்கம் வந்தால் கொலை செய்துவிடுவோம்’’ என மிரட்டியதாகவும் தெரிகிறது.

    இது குறித்து அந்த மாணவி மீண்டும் திருப்பத்தூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயலட்சுமி வழக்குப் பதிவு செய்து, சதீஷ் உள்பட சிலரிடம் விசாரணை நடத்தி வருகிறார்.
    ×